ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
ஆடி வெள்ளி: ஈரோட்டில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு பால், தயிா், இளநீா் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா்.
இதேபோல, சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் என மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோபியில்...
கோபி அருகேயுள்ள பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டனா்.
கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஈரோடு, பவானி, சத்தி, அந்தியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றியும், குண்டத்துக்கு உப்பு, மிளகு செலுத்தியும் அம்மனை வழிபட்டனா்.
