1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும்
திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. மாநகரில் பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் ஆண்டிப்பாளையம் குளம் பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது.
இங்கு, மோட்டாா் படகு 2, துடுப்புப் படகு 3 மற்றும் பெடல் படகு 8 என மொத்தம் 13 படகுகள் உள்ளன. மோட்டா் படகில் 20 நிமிஷங்களுக்கு ரூ.100, 4 இருக்கைகள் கொண்ட பெடல் படகு மற்றும் 5 இருக்கைகள் கொண்ட துடுப்புப் படகுகளில் 20 நிமிஷங்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.100, இரண்டு இருக்கைகள் கொண்ட பெடல் படகில் 30 நிஷங்களுக்கு ரூ.150 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், 4 போ் கொண்ட குடும்பம் படகு சவாரி செய்வதற்கு குறைந்தது ரூ.400 செலவிட வேண்டும். இத்துடன் வாகன நிறுத்தக் கட்டணம், இதர செலவையும் சோ்த்தால் குறைந்தது ரூ.500 இல்லாமல் இங்கு வர முடியாது.
சுற்றுலாத் தலங்களில் உள்ள படகு சவாரிகளுக்கு வசூலிக்கப்படுவதை விட இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி படகு சவாரிக்கான கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். மேலும், விடுமுறை, பண்டிகை நாள்களில் ஆண்டிபாளையம் குளத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.