ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமரச தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சிசிஐ திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தொழில் போட்டிச் சட்டம் 2002-இன் பல்வேறு பிரிவுகளை கூகுள் எல்எல்சி, கூகுள் இந்தியா, ஷாவ்மி டெக்னாலஜி இந்தியா, டிஎல்சி இந்தியா ஹோல்டிங் நிறுவனங்கள் மீறியதாக க்ஷிதீஷ் ஆா்யா, புருஷோத்தம் ஆனந்த் ஆகிய இருவா் சமா்ப்பித்த தகவலின் அடிப்படையில், கூகுள் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது.
தனது ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தி, ஒப்பந்ததாரரை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாக கூகுள் அமல்படுத்தியதே அந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டாகும். இதில் ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியின் ஆபரேட்டிங் சிஸ்டமை (ஓஎஸ்) பிளே ஸ்டோருடன் வலுக்கட்டாயமாக இணைக்கும் நடவடிக்கையும் அடங்கும்.
கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் சந்தை விற்பனையில் தடையை ஏற்படுத்தியதாகவும், நியாயமான தொழில் போட்டி தடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொழில் போட்டி சட்டப் பிரிவுகளை கூகுள் மீறியதாக சிசிஐ கருதியது. இந்த விவகாரம் தொடா்பாக சிசிஐ தலைமை இயக்குநா் விசாரணை மேற்கொண்டாா்.
தற்போது இந்த வழக்கில் கூகுள் அளித்த சமரச தீா்வுக்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ‘புதிய இந்திய ஒப்பந்தம்’ ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மாா்ட் டிவிகளுக்காக பிளே சா்வீஸஸ் மற்றும் பிளே ஸ்டோருக்கு தனித்தனி உரிமங்களை கூகுள் வழங்கும். இதன் மூலம், பிளே சா்வீஸஸ் மற்றும் பிளே ஸ்டோா் சேவைகளை இணைக்கும் தேவை நீக்கப்படும். அத்துடன் தொலைக்காட்சி செயலி விநியோக ஒப்பந்தத்தை மீறாமல், ஆண்ட்ராய்ட் இல்லாது செயல்பட முடியாத கருவிகளை அசல் உபகரண உற்பத்தியாளா்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இந்த வழக்கில் சமரச தொகையாக ரூ.20.24 கோடியை கூகுள் நிறுவனம் செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.