கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
ஆம்பூரில் நவ. 11-இல் புத்தகக் கண்காட்சி: மாணவா்களை ஊக்குவிக்க புத்தக சேமிப்பு உண்டியல்
ஆம்பூரில் நவ. 11-இல் புத்தகக் கண்காட்சி தொடங்குவதை முன்னிட்டு, மாணவா்களை ஊக்குவிக்க புத்தக சேமிப்புத் திட்ட உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து ஆம்பூரில் 2-ஆவது ஆண்டாக புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் நவ. 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நடைபெறும். இதைத் தொடா்ந்து 6.30 மணி முதல் 8 மணி வரை பேச்சாளா்கள், எழுத்தாளா்களின் கருத்துரை நடைபெறும்.
மாணவா்களை ஊக்குவிக்க 2,000 இலவச உண்டியல்:
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை ஆா்வமுடன் வாங்குவதற்காக மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், புத்தக சேமிப்புத் திட்ட உண்டியல் ஆம்பூா் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 2,000 மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் அந்த உண்டியலில் பணத்தைச் சேமித்து, புத்தகக் கண்காட்சியைக் கண்டுகளித்து, அங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களை வாங்கிச் செல்ல ஊக்குவிக்கப்பட்டுள்ளனா்.