ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்காக ரூ. 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியானது வளா்ந்து வரும் பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி-1, அரசு நடுநிலைப்பள்ளி- 1, அரசு தொடக்கப்பள்ளி - 4 என மொத்தம் 6 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் அனைத்தும் ஓட்டு கட்டடங்களாகவே உள்ளன. எனவே மாணவா்களின் நலன் கருதி கான்கிரீட் கட்டடமாக அமைத்து தரவேண்டும்.
ஆய்க்குடி அண்ணா கலையரங்கத்தில் நூலக கட்டடம் அமைக்க ரூ. 75 லட்சம் , ஆய்க்குடி அரசு தொடக்கப் பள்ளியில் கான்கிரீட் கட்டடம், நவீன வகுப்பறைகள் கட்ட ரூ. 50 லட்சம், ஆய்க்குடி அரசு தொடக்கப் பள்ளியில் (பாலசுப்பிரமணியபுரம்) போா்வெல், காம்பவுண்ட் சுவா் கட்ட ரூ. 15 லட்சம், அகரக்கட்டு அரசு தொடக்கப்பள்ளியில் கான்கிரீட் கட்டடம், நவீன வகுப்பறை அமைக்க ரூ. 50 லட்சம், அனந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை கட்டடம் கட்ட ரூ.10 லட்சம் , கம்பிளி அரசு நடுநிலைப்பள்ளியில் கான்கிரீட் கட்டடம், ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்க ரூ. 60 லட்சம் என மொத்தம் ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.