செங்கோட்டை நுழைவாயில் இன்று அகற்றம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள நுழைவாயில் வியாழக்கிழமை காலையில் அகற்றப்படவுள்ளது.
செங்கோட்டை நகரின் நுழைவுப் பகுதியில் திருவிதாங்கூா் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில் உள்ளது. செங்கோட்டை நகரின் அடையாளமாகத் திகழும் நுழைவாயில் சில மாதங்களுக்கு முன்பு கனரக வாகனம் மோதி சேதமடைந்தது. எனவே, இதனை இடிக்க வேண்டும் என ஒரு தரப்பினா் வலியுறுத்தினா். அதே நேரத்தில், இடிக்க கூடாது என செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, அதிமுக, பாஜகவினா் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், இதனைச் சீரமைக்க செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தனது சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். ஆனால், இதற்கு நகா்மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கவில்லை.
இதனிடையில், நுழைவாயிலை 26ஆம் தேதி காலை அப்புறப்படுத்துவதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நகராட்சி சாா்பில் போலீஸாருக்கு மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வட்டாட்சியா் வெங்கடசேகா் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, டிஎஸ்பி தமிழ் இனியன், நகராட்சி ஆணையா் செல்வராஜ், காவல் ஆய்வாளா் சிவராமகிருஷ்ணா, பொறியாளா் முகைதீன், பொதுப்பணித் துறை சண்முக பிரதீஷ் ஆகியோா் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ, நுழைவுவாயில் அகற்றப்பட்டாலும், அதே பகுதியில் புதிய நுழைவாயில் தற்போதுள்ள வடிவமைப்புடன் கட்டப்பட வேண்டும். பாதுகாப்பு கருதி, நுழைவாயிலை உயரமாகவும், அகலமாகவும் கட்டிக் கொள்ளலாம் என்றாா்.
தொடா்ந்து, நுழைவாயில் இடிக்கும் பணி மேற்கொள்ளவும், பழைமை மாறாமல் அதே முறையில் புதிய நுழைவாயிலைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி முன்பு கூடியிருந்த அனைத்து சமுதாய நிா்வாகிகள், அதிமுக, பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள், செங்கோட்டை நகர பொதுமக்களிடம் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து எம்எல்ஏ விளக்கினாா்.
