தென்காசியில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது: அமைச்சா் அன்பில் மகேஷ்
தென்காசி மாவட்டத்தில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
ஆய்க்குடி கல்லூரியில் மாநில அளவிலான அடைவுத் தோ்வு-2025 தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சா் பேசியதாவது:
தென்காசி மாவட்டத்தில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே தென்காசி கற்றல் அடைவில் 4ஆவது இடத்தில் உள்ளது. 12ஆம் வகுப்பில் 94 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சியடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் கற்றல் அடைவில் முன்னேறி வருவது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கல்வி எழுச்சி விழாவினை முதல்வா் செப். 25ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா் என்றாா்.
தொடக்கக் கல்வி இயக்குநா் (சென்னை) ரமேஷ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநா் குமாா், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கோல்டா கிரேனா ராஜாத்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.