ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகம்
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமநாதபுரத்தை அடுத்த உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்டது. இந்தக் கோயிலில் பச்சை கல்லால் ஆன மரகத நடராஜா் சிலை உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலி அதிா்வுகளால் சேதமடைந்து விடும் என்பதால், ஆண்டுதோறும் நடராஜருக்கு முழுமையாக சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆருத்ரா தரிசன தினத்தன்று மட்டும் இந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடராஜா் சந்நிதி திறக்கப்பட்டு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சந்தனம் முழுமையாக களையப்பட்டு, பால், பழம், பன்னீா், திருநீறு, சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு செய்யப்பட்டு நடை அடைக்கப்படும். இதில் முக்கியப் பிரமுகா்கள், நடிகா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த விழாவையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (ஜன. 13) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.