இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?
இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படத் தவறியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி குரூப் ஸ்டேஜில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
கேப்டனாகிறாரா ஜோ ரூட்?
வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) புதிய கேப்டனை தேடும் பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட கவனம் செலுத்தி வருவதாகவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். ஆனால், இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு யாருக்கு கிடைத்தாலும், அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி மிகவும் திறமை வாய்ந்த அணி. இனிவரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.
இங்கிலாந்து அணி அடுத்து இரண்டு மிகப் பெரிய டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து அணி அதனை நன்றாக கட்டமைத்து வருவதாக நினைக்கிறேன். ஆஷஸ் தொடரை எங்களால் வெல்ல முடியும் என நினைக்கிறேன். சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்றார்.