இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 முதல் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து 2025-2027 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான சுழற்சி தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற தவறியது.
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தே இந்திய அணி நன்றாக விளையாட வேண்டும்.
ஜோ ரூட் சொல்வதென்ன?
இந்தியா போன்ற அசைக்க முடியாத வலுவான அணிக்கு எதிராக விளையாடும்போது ஒளிந்து கொள்ள இடம் கிடையாது எனவும், தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால், இந்தியா போன்ற மிகவும் வலிமையான அணிக்கு எதிராக விளையாடும்போது, எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள இடங்கள் கிடையாது. இந்தியாவை வெல்ல வேண்டுமென்றால், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி குரூப் ஸ்டேஜில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறிய போதிலும், அந்த அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 225 ரன்கள் குவித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.