இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
கடுமையாக விமர்சித்த கம்ரான் அக்மல்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், இந்திய அணியைப் போன்று திறமையின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் அந்த அணியை விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி உள்ளூர் அணியைப் போன்று விளையாடியது. மிகவும் வெட்கப்படும்படியான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரைப் பாருங்கள். ஐபிஎல் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடினால், அவர்கள் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திவிடுவார்கள். திறமையின் அடிப்படையில் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால், அவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அணியில் வீரர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்றார்.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 29) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.