இடப் பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தில் சனிக்கிழமை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமம், மேலத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி வேம்பு (44) என்பவருக்கும், பிச்சப்பிள்ளை மகன் மணிகண்டன் (35) என்பவருக்கும் நிலத் தகராறு இருந்துவந்தது. இந்நிலையில், பிரச்னைக்குரிய நிலத்தை வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் சனிக்கிழமை அளவிட்டுக் கொண்டிருந்தனா்.
நிலத்தை அளவீடு செய்யக் கூடாது எனக் கூறி, தடுக்க முயன்ற வேம்பு மனமுடைந்து தனது முந்திரிக் காட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் மற்றும் காவல் துறையினா் அவரை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பிவைக்கப்பட்டாா்.