குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி ச...
`இது பாலியல் வன்கொடுமை முயற்சியாகாது' - சிறுமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து தற்போது விவாதமாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பவன், ஆகாஷ் ஆகியோர் தொல்லை கொடுத்துள்ளனர். இரண்டு பேரும் சிறுமியை வழிமறித்து, அவர் மீது தவறாக கைவைத்ததுடன், பைஜாமா கயிற்றை அவிழ்த்து அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு அச்சிறுமியை இரண்டு பேரும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்துச்செல்ல முயன்றனர். அந்நேரம் அந்த வழியாக வந்தவர்கள் தலையிட்டதால் இரண்டு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2021ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஆரம்பத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் இரண்டுபேர் மீதும் 354-B IPC பிரிவின் கீழ் தாக்குதல் மற்றும் 9/10 வது போக்சோ சட்டத்தின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா இவ்வழக்கு விசாரணையின் போது கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கின் உண்மைகளை பார்க்கும் போது, இது பாலியல் வன்கொடுமையோ, அல்லது அதன் முயற்சிக்கான குற்றமாக தெரியவில்லை. இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவேண்டியது அவசியம்.
பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபடுவதற்கு தயாராவதும், பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. மார்பகத்தை பிடிப்பதோ அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் அத்துமீறலாக/ தாக்குதலாக தான்கருத முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்வதில் உறுதியாக இருந்ததாக பதிவு செய்யப்பட்ட எந்த ஆதாரமும் உறுதிபடுத்தவில்லை.

ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், பாதிக்கப்பட்டவரை மதகுக்கு அடியில் இழுத்துச் செல்ல முயன்று, அவரது பைஜாமியின் கயிற்றை அவிழ்த்தது ஆகும். குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த செயலால் பாதிக்கப்பட்டவர் நிர்வாணமாகிவிட்டார் அல்லது ஆடைகளை அவிழ்த்துவிட்டார் என்று சாட்சிகளால் கூறப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை," என்று நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் இக்கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர், இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளார், "உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் மிகக் குறைந்த அளவிலே நடவடிக்கை எடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.