Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்...
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானி!
உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக நீடிக்கிறார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார், உலகளவில் ஐந்தாவது பணக்காரப் பெண்ணாக முன்னேறியுள்ளார். மேலும், உலகப் பணக்காரப் பெண்களின் பட்டியலில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
புதிய கோடீஸ்வரர்கள்
இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களின் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர். புதுதில்லியைச் சேர்ந்த இருவரும், பெங்களூரு, புணே மற்றும் அகமதாபாத் நகரங்களைச் சேர்ந்தவர்களும் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்திய பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 34,514 கோடியாக உள்ளது. இது சீனாவின் சராசரியான ரூ. 29,027 கோடியைவிட அதிகம்.
2025 ஆம் ஆண்டில் புதிதாக 45 கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 165 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்திய கோடீஸ்வரர்களின் மொத்தம் மதிப்பு 950 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்திய மதிப்பின்படி, ரூ. 81.29 லட்சம் கோடி. இது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும். செளதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும்.
அமெரிக்கா முதலிடம்
உலகளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 870 பேருடன் அமெரிக்கா முதலிடத்திலும், 823 பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
129 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நகரின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 90 கோடீஸ்வரர்களுடன் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. ஆசியாவின் கோடீஸ்வரர்கள் அதிகம் கொண்ட நகரங்களாக சீனாவின் ஷாங்காய் (92), பெய்ஜிங் (91) இருக்கிறது.
அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 27 சதவிகிதம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 10%, சீனாவில் 9% அதிகரித்து வருகின்றது.
அம்பானியின் சொத்து மதிப்பு
நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 91.8 பில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பின்படி, ரூ. 7.85 லட்சம் கோடியாகும். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 53.5 பில்லியன் டாலராக (ரூ.4.57 லட்சம் கோடி) உள்ளது. உலகளவில் 27-வது இடத்தில் இருக்கிறார்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர்களாகும்.