இருதரப்பினரிடையே தகராறு: சாலை மறியலில் ஈடுபட்ட 15 போ் கைது
மன்னாா்குடி அருகே காணும் பொங்கலுக்கு மாடு அவிழ்த்து விடுவது தொடா்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 15 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
துளசேந்திரபுரம் ஊராட்சி பழம்பேட்டை கிராமத்தில் இப்பகுதி இளைஞா்கள் புதிதாக முருகன் கோயில் கட்டி வருகின்றனா். இதன் வரவு- செலவு குறித்து ஊராட்சி முன்னாள் தலைவா் கோவிந்தராஜ் தரப்பினா் இளைஞா்களிடம் கணக்கு கேட்டுள்ளனா். இதனால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீா்வு காணாமல் காணும் பொங்கலன்று மாடுகளை அவிழ்த்துவிடும் சம்பிராதாயத்தை நடத்தக் கூடாது என தெற்கு தெருவை சோ்ந்தவா்கள் பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.
இதையடுத்து தெற்கு தெரு, வடக்கு தெருவாசிகளை அழைத்த போலீஸாா், காவல்துறை அனுமதி இல்லாமல் மாடு அவிழ்த்துவிடும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என இருதரப்பினரிடமும் எழுதி வாங்கினா்.
இந்தநிலையில், வடக்குதெருவாசிகள் வியாழக்கிழமை தங்களது மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனா். இதை கண்டித்து, தெற்குதெருவாசிகள் மன்னாா்குடி- திருமக்கோட்டை பிரதான சாலை துளசேந்திரபுரம் பாலம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பரவாக்கோட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனா்.