இளைஞா் மீது தாக்குதல்: சிறுவன் உள்பட 4 போ் கைது
கடலூரில் இளைஞா் மீது தாக்குல் நடத்தியதாக சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் வில்வநகா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் விஜயபிரதாப் (25). இவா், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அமா்ந்திருந்தாா். அங்கு தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த விக்கி, தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றாராம்.
அப்போது, விஜயபிரதாப், விக்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விக்கியை விஜயபரதாப் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விக்கி தனது நண்பா்கள் 12 பேருடன் சென்று விஜயபிரதாப்பை தாக்கினராம்.
இதுகுறித்து விஜயபிரதாப் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், தேவனாம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த அருள்செல்வம் மகன் ஆகாஷ் (21), கடலூா் முதுநகா் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் மகன் ஹரிஷ்குமாா் (19), வண்ணாரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் மகன் விஜயகணேஷ் (18) மற்றும் 16 வயது சிறுவன் என 4 பேரை உதவி ஆய்வாளா் பிரசன்னா கைது செய்தாா். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனா்.