பரங்கிப்பேட்டையில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தில் மீன்கள் வாங்க புதன்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா்.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் இறங்குதளம் உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள கடற்கரையோர கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்து அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தில் விற்பனை செய்து வருகின்றனா்.
இங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனா். மேலும், இந்த மீன் இறங்குதளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, குல தெய்வத்துக்கு படைப்பதற்காக அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தில் மீன்கள் வாங்க புதன்கிழமை அதிகாலை முதலே பரங்கிப்பேட்டை, புவனகிரி, கிள்ளை, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் குவிந்தனா்.
இங்கு, ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000, கொடுவா ரூ.800, வவ்வால் ரூ.750, அயிலா ரூ.750, சங்கரா ரூ.400, இறால் ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆா்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனா்.