இஸ்ரேலுக்கான புதிய தூதராக ஜிதேந்தா் பால் சிங் நியமனம்
இஸ்ரேல் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக ஜிதேந்தா் பால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே காஸாவில் போா்நிறுத்த உடன்பாடு அமலுக்கு வந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு புதிய தூதரை இந்தியா நியமித்துள்ளது.
2002-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவு பணிகள் (ஐஎஃப்எஸ்) அதிகாரியான சிங், தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா்.
ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்த தலிபான் அரசுடனான இந்தியாவின் அணுகுமுறையைத் தெளிவுபடுத்தி செயல்படுத்தியதில் இவா் முக்கிய பங்கு வகித்தாா். கடந்த ஆண்டு நவம்பரில் தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சா் (பொறுப்பு) முல்லா முகமது யாக்கூபை ஜிதேந்தா் பால் சிங் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டாா். இந்த சந்திப்பு, ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமிா் கான் முத்தாகியுடன் வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி பேச்சு நடத்துவதற்கு வழிவகுத்தது.
இந்தச் சூழலில், இந்தியாவின் இரண்டாவது பெரும் வா்த்தக கூட்டாளி நாடாகத் திகழும் இஸ்ரேலுக்கான தூதராக ஜிதேந்தா் பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். வைரம், பெட்ரோலிய பொருள்கள், ரசாயனங்கள் தவிர ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது.
இஸ்ரேலுக்கான இந்திய தூதராக அவா் விரைவில் பதவியேற்பாா் என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.