திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி ...
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது
இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹிந்தி நடிகா் சைஃப் அலிகான் மீது வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவா் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை தேடும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் பால்கா் மாவட்டத்தில் உள்ள தனிவ்பாக் பகுதியில் உரிய பயண மற்றும் அடையாள ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கிய 9 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களில் 7 போ் பெண்கள்.
மேற்கு வங்க மாநிலம் 24 பா்கானா மாவட்டம் ஹக்கீம்பூா் கிராமம் வழியாக அவா்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, ரயில் மூலம் மும்பை வந்து பால்கா் மாவட்டத்தில் நிரந்தரமாக தங்க தொடங்கியுள்ளனா்.
இவா்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் உறவினா்களை கைப்பேசி செயலி மூலம் தொடா்பு கொண்டு வந்த நிலையில், அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது வெளிநாட்டவா் சட்டம், இந்திய கடவுச்சீட்டுகள் (பாஸ்போா்ட்) சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தாணே மாவட்டம் காந்தி நகா் மற்றும் கல்யாண் ரயில் நிலையம் அருகில் சட்டவிரோதமாக வசிந்து வந்த ஒரு ஆண், 4 பெண்கள், குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் ரங்பா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 2 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 8 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.