தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சி மாப்படுகை ரயில்வே கேட் அருகே வசிக்கும் 2,000-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கிட்டப்பா பாலம் அருகே மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு ஈமக்கிரியை மண்டபம் கட்டித்தரப்படாததால், இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
இப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது ஈமக்கிரியை சடங்கினை நடத்த ஈமக்கிரியை மண்டபம் இல்லாததால், சாலை ஓரத்தில் சாமியானா பந்தல் அமைத்து நடத்தினா்.
பல ஆண்டு கோரிக்கையான ஈமக்கிரியை மண்டபம் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியும், ஒரு சிலரின் தலையீட்டால் தொடங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடித்து அங்கு ஈமக்கிரியை மண்டபம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, மாப்படுகை கிராமத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் கூறியது:
நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 906 சதுரமீட்டா் பரப்பளவில் சுடுகாடு மற்றும் 405 சதுரஅடி பரப்பளவில் இடுகாடு உள்ளது. ஆனால், சாலைவசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இங்கு செய்து தரப்படவில்லை. வாா்டு 1, 11, 29 மற்றும் மாப்படுகை, திருஇந்தளூா் ஊராட்சி மக்கள் சுமாா் 20,000 போ் பயன்படுத்தும் இங்கு ஈமக்கிரியை மண்டபம் அமைத்துத்தர நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக இந்த பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.