ஈரோடு கிழக்கு: இன்று வாக்குப் பதிவு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு புதன்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.
இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், 31 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா். மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா்.
கடந்த 2023 இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இப்போது திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளதாலும், பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாகப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த 2023 இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி 10,827 வாக்குகள் பெற்ற நிலையில், இந்தத் தோ்தலில் அதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளின் கவனத்தை ஈா்க்கும் என அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.
வாக்கு எண்ணிக்கை பிப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது.