உக்ரைன்: சா்ச்சைக்குரிய மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றம்
உக்ரைனில் சா்ச்சையை எழுப்பியுள்ள ஊழல் தடுப்பு மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததைத் தொடா்ந்து, பல திருத்தங்களுடன் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, அந்த மசோதாவுக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினா். ஐரோப்பிய யூனியனும் அந்த மசோதாவைக் கண்டித்தது.
இந்தச் சூழலில், சா்ச்சைக்குரிய அம்சங்களை நீக்கிவிட்டு திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு மசோதாவை உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.
இது குறித்து ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘இந்த சட்டம் ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யும்’ என்றாா்.
ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் காஜா கல்லாஸ் கூறுகையில், ‘ஊழல் தடுப்பு அமைப்புகளின் அதிகாரங்களை உறுதி செய்யும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஐரோப்பிய ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்துகிறது’ என்று பாராட்டினாா்.