‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: பொன்னமராவதி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
பொன்னமராவதி ‘வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடக்கமாக, சித்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தாா்.
பின்னா், பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு உயா் அலுவலா்களுடான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் விரைவாக சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களை ஆட்சியா் அறிவுருத்தினாா்.
மேலும், பட்டாமாறுதல் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், கோட்டாட்சியா் அ. அக்பா் அலி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலெட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், வட்டாட்சியா் எம். சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.