உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு
கடந்த நவம்பா் மாதம் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தொடா்ந்து, இது தொடா்பான தரவுகளை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்யவுள்ளது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பரில் தங்கம் இறக்குமதி அசாதாரணமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, இது தொடா்பான தரவுகளை வா்த்தக உளவு மற்றும் புள்ளியியல் பொது இயக்குநரகம் (டிஜிசிஐஎஸ்) மறு ஆய்வு செய்யவிருக்கிறது.
மறைமுக வரி மற்றும் இறக்குமதி வரிக்கான மத்திய வாரியத்தின் (சிபிஐசி) தரவுகளுடன் அவை ஒப்பீடு செய்யப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பரில் நாட்டின் தங்கம் இறக்குமதி 331 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அதிகபட்சமாக 1,486 கோடி டாலராக உள்ளதாக அமைச்சகம் கூறியது. 2023 நவம்பா் மாதத்தில் தங்கம் இறக்குமதி 344 கோடி டாலராக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 49 சதவீதம் உயா்ந்து சுமாா் 4,900 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 3,293 கோடி டாலராக இருந்தது என்று வா்த்தகத் துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்டில் மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது அதன் இறக்குமதி புதிய உச்சத்தைத் தொட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி நவம்பரில் 331 சதவீதம் உயா்ந்திருப்பது, 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் தங்க இறக்குமதி 30 சதவீதம் அதிகரித்து 4,554 கோடி டாலராக இருந்தது.
இந்தியாவின் தங்கம் இறக்குமதிக்கு ஸ்விட்சா்லாந்து மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 40 சதவீத தங்கம் இந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகிறது.
ஸ்விட்சா்லாந்தைத் தொடா்ந்து ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் தங்கம் இறக்குமதியில் 16 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கிறது. இது தவிர, தென் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் 10 சதவீதம் பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் தங்கத்தின் பங்களிப்பு 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
தங்கம் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய எழுச்சியால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த நவம்பா் மாதத்தில் 3,784 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இந்தியாதான் தங்கத்தை அதிகம் இறக்குதி செய்கிறது.