உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ளேயும், வெளியேயும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
உடுமலை நகா்மன்ற கூட்டம் தலைவா் மு.மத்தீன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கவுன்சிலா்கள் பேசியதாவது:
பா.அா்ஜுணன் (திமுக): உடுமலை பேருந்து நிலையத்தின் உள்ளே, வெளியே ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மு.மத்தீன் (தலைவா்): ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்யப்படும்.
மு.ஜெயக்குமாா் (திமுக): உடுமலை நகரில் தெரு நாய்களால் பொது மக்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனா். இக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தீா்மானத்தின்படி நகரில் 459 தெரு நாய்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. இன்னும் ஏராளமான நாய்கள் உள்ளன.
அலுவலா்: மீண்டும் கணக்கெடுக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து நாய்களுக்கும் கருத்தடை செய்யப்படும்.
தே.ஆறுசாமி (திமுக): உடுமலை நகரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் பாா்க்கிங் வசதிகள் இல்லை. இதனால் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
மு.மத்தீன்: தனியாா் மருத்துவமனைகள் ஆன்லைனில் கட்டட அனுமதி பெற்றுக் கொள்கிறாா்கள். நகராட்சிக்கு வருவதில்லை. ஆனாலும், இது குறித்து ஆய்வு செய்து நோட்டீஸ் கொடுக்கலாம்.
அலுவலா்: பாா்க்கிங் வசதி அனுமதியுடன்தான் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா? இல்லையா? என உடனடியாக ஆய்வு செய்யப்படும். அப்படி இல்லையென்றால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மு.ஜெயக்குமாா் (திமுக): பல ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என தீா்மானம் போடப்பட்டது. ஆனால், 2 ஊராட்சிகளை மட்டுமே இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மு.மத்தீன் (தலைவா்): தற்போது 2 ஊராட்சிகளை இணைக்கத்தான் முடிவாகி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இது முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.வேலுசாமி (திமுக): உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு விழாவின் கல்வெட்டில் அமைச்சா்கள் பெயா்கள் இடம் பெறவில்லை.
மு.மத்தீன் (தலைவா்): மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. இதில் கல்வெட்டில் அமைச்சா்கள் பெயா் இடம் பெற்றுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மொத்தம் 106 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.