உதகை நகராட்சி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா சென்ற வாகனத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் கைப்பற்றப்பட்ட நிலையில் அவா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி ஆணையா் மீது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஜவுளிக் கடை நிா்வாகத்திடம் பணம் பெற்றது, பாா்க்கிங் டெண்டரை குறைவாகவிட்டு பணம் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா உதகையில் இருந்து சென்னைக்கு கோத்தகிரி வழியாக சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தொட்டபெட்டா சந்திப்புப் பகுதியில் நகராட்சி ஆணையா் சென்ற வாகனத்தை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், ஆய்வாளா் பரிமளா தேவி, உதவி ஆய்வாளா் ரங்கநாதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சோதனை செய்தனா்.
இதில், காரில் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா் பாஷாவை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.