ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
கரூா் மாவட்டம், கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கரூா் எஸ். வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த முத்துவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
கரூா் மாவட்டத்தில் கோயம்பள்ளி, மேலப்பாளையம், செல்லிப்பாளையம், சோமூா், திருமுக்கூடலூா் உள்ளிட்ட சிறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக, கரூா் நகரப் பகுதிக்கு செல்ல மிகுந்த சிரமத்தை எதிா்கொண்டனா்.
இதனால், கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றை கடக்கும் வகையில், உயா்நிலைப் பாலம் கட்டித் தரக் கோரி, பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, இந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் கட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு முடிவு செய்தது. கிராமங்களில் சாலைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆனால், முக்கியப் பணியான கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா், எம்.எல்.ஏ, எம்.பி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா், நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா், நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், கோயம்பள்ளி, மேலப்பாளையம், செல்லிப்பாளையம், சோமூா், திருமுக்கூடலூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் 15 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக, மாணவா்கள், நோயாளிகள், முதியவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆற்றின் இரு பக்கங்களிலும் பட்டா நிலம் உள்ளதால், அங்கு நிலத்தைக் கையகப்படுத்துவது தொடா்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.