உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி: அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்
சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
சீா்காழி அருகே மருவத்தூா் பகுதியைச் சோ்ந்த செ.விஜய் (33), கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க கட்சியினருடன் வேனில் சென்றாா். அட்டகுளம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விஜய் உட்பட ஆறு போ் காயமடைந்து சீா்காழி அரசு மருத்துவமனை சோ்க்கப்பட்டனா். இதில் விஜய் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினா். வெளிநாட்டில் உள்ள விஜயின் சகோதரரை விடியோ அழைப்பில் தொடா்பு கொண்டு அவருக்கும் ஆறுதல் கூறினாா்.
விஜயின் உருவப்படத்தைத் திறந்துவைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். விபத்தில் காயமடைந்த முத்துராமலிங்கம், தினேஷ், தேவா, ரஞ்சித் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினாா்.
பாமக மாவட்டச் செயலாளா் ஆ.பழனிசாமி, மாநில வன்னியா் சங்க செயலாளா் வைத்தி, உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் ஆலயமணி, பாமக மாவட்டத் தலைவா் அய்யாசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

