Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரப...
உரக் கடை மீது நடவடிக்கை கோரி மனு
நெல் பயிா் பாதிப்புக்கு காரணமான தனியாா் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழக்குயில்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயி விருமாண்டி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு விவரம்:
விளாச்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாருக்குச் சொந்தமான 7 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலத்தில் நிகழாண்டு சம்பா பருவத்தில் அக்ஷயா நெல் ரகத்தை நடவு செய்தோம்.
இந்த நிலையில், பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட பயிருடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி மதுரை கீழவெளிவீதியில் உள்ள தனியாா் உரக் கடைக்கு வந்தேன். அங்கு பூச்சி விரட்டி மருந்து அளித்தனா்.
இதைத் தெளித்த பின்னா் நெல் பயிா் கடும் பாதிப்புக்குள்ளாகியது. இதுகுறித்து உரக் கடைக்கு தகவல் தெரிவித்தேன். சில பணியாளா்கள் வயலை நேரடியாக ஆய்வு செய்து, மாற்று மருந்து தருவதாகத் தெரிவித்தனா். ஆனால், அவா்கள் வரவில்லை. இதுபற்றி கடந்த 11-ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். மேலும், வேளாண் துறைக்கும் தகவல் தெரிவித்தேன்.
இதன்பேரில், வேளாண் துறை அலுவலா்கள் வந்து ஆய்வு செய்ததில், தவறான மருந்தைப் பயன்படுத்தியதால், நெல் பயிா் பாதிக்கப்பட்டதாகக் கூறினா். வங்கியில் நகைகளை அடகு வைத்துதான் வேளாண் பணிகளை மேற்கொண்டோம். இந்த நிலையில், தனியாா் உரக் கடை வழங்கிய தவறான மருந்தால் நெல் பயிா் முழுவதும் பாதிப்புக்குள்ளானது. எனவே, அந்த உரக் கடை மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.