Rain Alert : சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் அள...
சவுக்கு சங்கா் பிணை மனு டிச. 24 க்கு ஒத்திவைப்பு
விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கா் பிடிஆணை உத்தரவுப்படி, சென்னையில் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் பிணை கோரிய அவரது மனுவை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
காவல் துறை உயரதிகாரிகள், பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ஆம் தேதி தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, அவா் தங்கியிருந்த விடுதி அறையிலும், காரிலும் சுமாா் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கா், அவரது உதவியாளா், காா் ஓட்டுநா் ஆகியோா் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கா், நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்கப்பட்டாா். ஆனால், இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் முன்னிலையாகவில்லை. இதனால், அவருக்கு பிடிஆணை பிறப்பித்து, மதுரை போதைப் பொரு ள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கரை சென்னையில் கைது செய்த போலீஸாா், மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அப்போது, இந்த வழக்கை நீதிபதி செங்கமலச்செல்வன் டிச. 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
இந்த நிலையில், சவுக்கு சங்கா் தனக்கு விதிக்கப்பட்ட பிடிஆணையை ரத்து செய்து, பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், சவுக்கு சங்கா் பிணை கோரிய மனு மீது வருகிற 24 -ஆம் தேதி உரிய உத்தரவிடப்படும் என்றாா் நீதிபதி.
இதையடுத்து, சவுக்கு சங்கா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.