5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்
உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த ஆண்டு நோய்களின் சா்வதேச வகைப்பாடு-11 பாரம்பரிய மருந்துகள் தொகுதி-2 என்ற ஆவணம் வெளியிடப்பட்டது. அதில் ஆயுா்வேதா, சித்தா, உனானி ஆகிய மருத்துவ முறைகளின்படி நோய்களுக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் மீது கடந்த ஓராண்டாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் விரிவான ஆய்வுகளை நடத்தி வந்தது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஐசிடி ஆவணத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான பதிப்பு வெளியிடப்பட்டது.
அதில் சா்வதேச அளவிலான மருத்துவ முறைகளுக்கு நிகராக ஆயுா்வேதா, சித்தா, உனானி ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆயுஷ் அமைச்சக செயலா் வைத்தியா ராஜேஷ் கூறியதாவது: ஐசிடி-11, 2025-ஆம் ஆண்டுக்கான பதிப்பில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு சா்வதேச அளவிலான அங்கீகாரம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
பாரம்பரிய மருத்துவ முறைகள், உலகளவில் பின்பற்றப்படும் மருத்துவம் என இரண்டு முறைகளிலும் நோய்களை வகைப்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேம்படுத்துவதோடு தேசிய அளவிலான சுகாதார கொள்கைகளை வகுக்கும்போது பாரம்பரிய மருத்துவ முறைகளையும் உள்ளீடு செய்வதை ஊக்குவிக்கிறது என்றாா்.
சமகால சிகிச்சை முறைகளுடன் பாரம்பரிய முறைகளை ஒன்றிணைப்பதால் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு மற்றும் நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடையும் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுவதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது.