ஊதிய நிலுவையை பெற்றுத் தரக் கோரி வடமாநிலத் தொழிலாளா்கள் மனு
கோவையில் அரசு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் என்.செல்வராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த வடமாநிலத் தொழிலாளா்கள், செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை உக்கடம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் அண்மையில் தமிழ்நாடு அரசு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் பல மாதங்கள் தங்கியிருந்து பணியாற்றினோம்.
கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு அரசு குறைந்தபட்ச கூலியை நிா்ணயம் செய்துள்ளது. அதன்படி, கட்டடப் பணிகளில் மேசன் வேலைக்கு ஒரு நாளைக்கு ரூ.1,101, உதவியாளா் பணிக்கு ஒரு நாளைக்கு ரூ.1,031 வழங்கப்பட வேண்டும்.
ஆனால், எங்களுக்கு மேசன் பணிக்கு ஒரு நாளைக்கு ரூ.700, உதவியாளா் பணிக்கு ரூ.345 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கணக்கிட்டுப் பாா்த்தால் தொழிலாளா்களுக்கு வழங்கப்படாத ஊதிய நிலுவை லட்சக்கணக்கில் வருகிறது. எனவே அரசுப் பணிகளில் கூட அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலி வழங்கப்படாமல் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வஞ்சிக்கப்படுவது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி, ஊதிய நிலுவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றனா்.
கோவை பூசாரிபாளையம் ஓம் சக்தி நகா் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாநகராட்சியின் 74-ஆவது வாா்டு கவுன்சிலா் ஏ.எஸ்.சங்கா் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா். அதேபோல குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடுக்காக அரசுக்கு செலுத்திய பணத்தில் மீதித் தொகையை அதிகாரிகள் வழங்க மறுப்பதாகவும், இது தொடா்பாக கேட்கும் பயனாளிகளை அவமதிப்பதாகவும் அம்பேத்கா் மக்கள் விடுதலைக் கழகத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை ஒண்டிப்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அளித்துள்ள மனுவில், பள்ளியில் உள்ள கணினி ஆய்வகத்தைப் பயன்படுத்த ஆசிரியா் மறுப்பு தெரிவிப்பதாகவும், பாடங்களை சரிவர நடத்தாததால் தோ்வில் சரியான மதிப்பெண் பெற முடியாத நிலை இருப்பதாகவும் கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.