வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி பறக்கவிடப்பட்டதால் சா்ச்சை
வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி பறக்கவிடப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பான புகாரையடுத்து காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் அந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு பறக்கவிடப்பட்டிருந்த கட்சிக் கொடியை அகற்றினா்.
வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு தற்போது வனத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சிவராத்திரி தினத்தையொட்டி பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு ஏராளமானோா் தயராகி வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்றவா்களில் சிலா் அங்குள்ள 7-ஆவது மலையின் உச்சியில் தவெக கொடியைப் பறக்க விட்டுள்ளனா். இதுதொடா்பான காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவி பேசு பொருளானது. இதையடுத்து, அங்கு சென்ற ஆலாந்துறை போலீஸாா், வனத் துறையினா் அந்தக் கொடி அங்கிருந்து அகற்றினா்.
இதுதொடா்பாக, கோவை மாவட்ட வனத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், போளுவாம்பட்டி வனச் சரகம், போளுவாம்பட்டி பிளாக் 2 காப்புக்காடு, வெள்ளபதி பிரிவு பூண்டி தெற்கு சுற்றுக்கு உள்பட்ட 7-ஆவது மலையில் கட்டப்பட்டிருந்த ஒரு கட்சியின் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிங்கிரி மலையில் இதுவரை பாதயாத்திரைக்காக மட்டும் பக்தா்கள் சென்று வந்த நிலையில், காப்புக்காடு பகுதியில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் அரசியல் கட்சிகளிடையே விவாதத்துக்குள்ளானதால், இதுகுறித்து போலீஸாருடன் வனத் துறையினரும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.