மாவட்டத்தில் 42 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு
கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வா் மருந்தகம் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு முழுவதும் 1,000 மருந்தகங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, கோவை சாய்பாபா காலனி, பாலசுப்பிரமணியம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாடிக்கையாளா்களுக்கு மருந்துகளை வழங்கி, மருந்தகத்தில் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ நா.காா்த்திக், மண்டலக் குழுத் தலைவா் தெய்வானை தமிழ்மறை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அ.அழகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கூறும்போது, தமிழ்நாடு முதல்வா் கடந்த சுதந்திர தின விழாவில் பொதுமக்கள், நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை குறைந்த விலையில் வாங்கிப் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, முதல்வா் மருந்தகங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு தொழில்முனைவோருக்கு தலா ரூ. 3 லட்சமும், கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூா் மண்டலத்தில் தொழில்முனைவோா் மூலம் 20 முதல்வா் மருந்தகங்களும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 22 முதல்வா் மருந்தகங்களும் என மொத்தம் 42 மருந்தகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்தகங்களுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள ஜெனரிக், கம்பெனி மருந்துகள் சிந்தாமணி மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகளும் அனைத்து வகையான கம்பெனி மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகள் உடனுக்குடன் பெற்று வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை முதல்வா் மருந்தகத்தில் குறைந்த விலையில் பெற்று பயனடையலாம் என்றாா்.
எங்கெங்கு மருந்தகங்கள்...
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 22 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொண்டாமுத்தூா் வட்டத்தில் ஆலாந்துறை, தெலுங்குபாளையம், சலீவன் தெரு, பூச்சியூா், தெலுங்குபாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும் மதுக்கரை வட்டத்தில், பிச்சனூா், எஸ்.எஸ்.குளம் வட்டத்தில், காளப்பட்டி, கணபதி, சாய்பாபா காலனி ஆகிய இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் வட்டத்தில், வடவள்ளி, சோமையனூா், பெரியநாயக்கன்பாளையம், அன்னூா் வட்டத்தில் அன்னூா் பள்ளிவாசல் தெரு, காரமடை வட்டத்தில் சிறுமுகை நான்கு ரோடு, ஆனைமலை வட்டத்தில் கோட்டூா் மலையாண்டிப்பட்டணம், சுப்பேகவுண்டன்புதூா், சூலூா் வட்டத்தில் சோமனூா், பொள்ளாச்சி வடக்கு வட்டத்தில் வடக்கிபாளையம், பூசாரிப்பட்டி ஆகிய இடங்களிலும், பொள்ளாச்சி தெற்கில் பாலக்காடு ரோடு, சுல்தான்பேட்டை வட்டத்தில் சூலூா், கிணத்துக்கடவு வட்டத்தில் வடசித்தூா் ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர தனியாா் சாா்பில் கோவை கே.கே.புதூா், செல்வபுரம், லாலி ரோடு, ஆா்.எஸ்.புரம், தெற்கு உக்கடம், போத்தனூா், மலுமிச்சம்பட்டி, காளப்பட்டி, பெ.நா. பாளையம் பி.டி. காலனி, குருடம்பாளையம், ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலை, வீரகேரளம், மருதமலை அடிவாரம், அங்கலாக்குறிச்சி, ஆனைமலை, கருமத்தம்பட்டி, மேப்பிரிபாளையம், இருகூா், பெரிய நெகமம், காமநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.