ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூா் மற்றும் நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்; கணினி உதவியாளா்கள், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணிவரன்முறைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஆகிய இடங்களில் பணியாற்றும் 927 ஊழியா்கள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக கலைஞா் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டன.
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், ஊராட்சி ஒன்றிய பணிகள் நடைபெறவில்லை. ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கீழ்வேளூா்: கீழ்வேளூா் ஒன்றியத்தில் 33 பணியாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.