ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் உறுதி
திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது
திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதியில், வெளிமாநில நபா்கள் சிலா் தங்கியிருப்பதாகவும், அவா்கள் கஞ்சாவை பதுக்கிவைத்து, இலங்கைக்கு கடத்தவிருப்பதாகவும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், தனியாா் விடுதியின் பின்பக்கம் வழியாக நுழைந்து அறையில் தங்கியிருந்த 5 நபா்களை பிடித்தனா். அப்போது ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பிடிபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சோ்ந்த திருப்பதி வெங்கடா சிவ ரெட்டி (24), கோமாரி லட்சுமி நாராயணா (35), பாலகோலனுவிஷ்ணு வரதன் ரெட்டி (24), நுனே சிவசங்கா் (26), மஞ்சுநாதா (31) ஆகிய 5 போ் என்பது தெரியவந்தது.
மேலும், அவா்களது காா்களை சோதனையிட்டதில், தலா 2 கிலோ வீதம் 200 பாா்சல்களில் மொத்தம் 400 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த கஞ்சா, கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.