ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!
கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்துள்ளது. நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
வங்கி அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, மொத்தம் ரூ. 21 கோடிக்கு மேல் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஒரு கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் சுமார் 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் அவர்கள் தப்பிச் சென்றதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கிலோ தங்க நகையின் மதிப்பு சுமார் ரூ. 20 கோடியாகும்.
வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர், மேலும் சந்தேக நபர்களைப் பிடிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் விஜய்புரா காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி, சந்தேக நபர்கள் போலி எண் தகடு கொண்ட சுசுகி மின் வாகனத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியின்படி மர்ம கும்பல் மகாராஷ்டிரத்தில் உள்ள உள்ள பந்தர்பூர் நோக்கிச் சென்றுள்ளனர்.
மேலும், விசாரணை நடந்து வருகிறது. சந்தேக நபர்களைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.