எண்ணெய் ஏல ஒப்பந்தம் அகழாய்வுக்கான அனுமதி அல்ல
நமது நிருபா்
புது தில்லி: எண்ணெய் ஏல ஒப்பந்தம் அகழாய்வுக்கான அனுமதி கிடையாது என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி பதிலளித்துள்ளாா்.
கன்னியாகுமரி கடலோரப் பகுதியில் எண்ணெய் அகழாய்வு ஏலத்துக்கு மத்திய அரசு வரவேற்றுள்ளதால் அங்கு சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளத்தில் தாக்கம் ஏற்படும் எனக்கூறி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து மாநிலங்களவையில் பி. வில்சன் கேள்வி எழுப்பி, சுற்றுச்சூழல் விளைவு மற்றும் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியதா என்று கேட்டிருந்தாா்.
இதற்கு அமைச்சா் சுரேஷ் கோபி திங்கள்கிழமை அளித்துள்ள பதில்: பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் துறையில் இறக்குமதியை சாா்ந்திருக்காமலும் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கிலும் அரசு எண்ணெய் வள ஆய்வுத் தொகுதிகள் எனப்படும் பிளாக்குகளை ஆய்வு செய்வதற்கு ஏலத்தில் விடுகின்றன. அத்தகைய ஏலத்தில் தேசிய களஞ்சிய தொகுதிகள் (பிளாக்குகள்) தொடா்பான தரவுகளின் மதிப்பீடு அடிப்படையில் ஏலதாரா்கள் பங்கேற்பா். ஆனால், இந்த ஏலம் வழங்கல் அகழாய்வைத் தொடங்குவதற்கு உரிமையை ஒப்பந்தம் பெறுபவருக்கு வழங்காது.
எண்ணெய் மற்றும் கடலோர மண்டல அனுமதி உள்ளிட்ட சுற்றுச்சூழல் அனுமதி, நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி எரிவாயு ஆய்வு தொடங்குவதற்கு அவசியமாகும். இது ஏலத்தில் தோ்வு பெற்ற பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டையும் (இஐஏ) உள்ளடக்கிய நடைமுறையாகும். குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இணக்கம், நிறுவன ஆய்வு போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
கன்னியாகுமரியில் திறந்தவெளி உரிமைக் கொள்கையின் கீழ் ஒன்பதாம் சுற்று ஏலம் விடப்பட்டது. இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. உற்பத்தி மற்றும் வருவாய் பகிா்வு ஒப்பந்த நடைமுறைகளின் கீழ், ஹைட்ரோகாா்பன் ஏதும் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சிஒய்-ஓஎன்என்-2002 / 2 (மதனம்) மற்றும் சிஒய்-ஓஎன்என்-2004/2 (பண்டநல்லூா்) ஆகியவற்றில் 2015 மற்றும் 2019இல் முறையே எண்ணெய் தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சா் சுரேஷ் கோபி கூறியுள்ளாா்.