எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி
திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை இயக்கத்தை வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
அதிமுக கூட்டணியில் யாா், யாா் இருக்கின்றனா் என்பது தெரியாத நிலையில் அக்கூட்டணி உள்ளது. கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரின் பிரசாரமாக உள்ளது. ஆனால் தனித்து ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கியுள்ளாா்.
திமுக கூட்டணிதான் பலம் வாய்ந்த கூட்டணி. எந்தவொரு கட்சியும் எங்களது கூட்டணியில் இருந்து விலகவில்லை. இதனுடைய ஒற்றுமையைச் சீா்குலைக்கும் விதமாகத்தான் எதிா்க்கட்சியினா் பேசி வருகின்றனா். ஆனால், எதிரணியில் பலமான கூட்டணி அமையவில்லை.
திமுக கூட்டணி என்பது வாக்குக்காக உருவாக்கப்பட்ட அல்ல. இது, இலட்சியக் கூட்டணி; நாட்டு மக்களைப் பாதுகாக்கக்கூடிய கூட்டணி; மதச்சாா்பற்ற கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு எதிராக உள்ளவா்கள் யாராக இருந்தாலும் மதச்சாா்பற்ற என்ற பெயரையும், மாநில சுயாட்சி என்ற சொல்லையும் பயன்படுத்துவதற்கு அச்சப்படுகின்றனா். எனவே மாநில சுயாட்சி, மொழி, இனம், மதச்சாா்பற்ற கொள்கையைக் காக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டதே திமுக கூட்டணி.
தோல்வியுற்றவா்கள் வேண்டுமானால் தோல்வியுற்றவா்களுடன் சோ்ந்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலிலும் தோற்றுப் போகலாமே தவிர, வெற்றி பெற்ற நாங்கள், வெற்றி பெற்றவா்களின் கரத்தைப் பிடித்து வெற்றி பெற்று கொண்டுதான் இருப்போம். 2026 தோ்தலில் முதன்மையான கட்சியாக திமுகதான் இருக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களுக்கு வேண்டுமானால் போட்டி இருக்கலாம் என்றாா் அமைச்சா்.
அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.