`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
என்எல்சி கிரேன் மோதி ஊழியா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன், பைக் மீது மோதியதில் என்எல்சி ஊழியா் உயிரிழந்தாா்.
நெய்வேலியை அடுத்துள்ள தாண்டவன்குப்பம் பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து மகன் தங்கதுரை (48), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை இரண்டாம் அனல் மின் நிலையத்துக்கு பணிக்கு சென்று, பிற்பகல் மந்தாரக்குப்பம் வழியாக பைக்கில் நெய்வேலிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, வடக்கு வெள்ளூா் ஈஸ்வரன் கோயில் அருகே என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன் வாகனம், சாலையோரம் சென்ற தங்கதுரை பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், கிரேன் வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த தங்கதுரை உறவினா்கள், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான போலீஸாா் தங்கதுரை குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.