என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தனது துறையில் நிதியோ, அதிகாரமோ இல்லை என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
உதகை, கூடலூரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அந்தத் தொகுதிகளின் எம்எல்ஏ.,க்களான ஆா்.கணேஷ் (காங்கிரஸ்), பொன் ஜெயசீலன் (அதிமுக) ஆகியோா் கேள்வி எழுப்பினா். இதற்கு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில்:-
என்னுடைய துறையில் உள்ள சிக்கல் குறித்து, இந்த கூட்டத் தொடரில் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போன்று, அனைத்துத் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் எங்களது துறையில் செயல்படுவதில்லை. எல்கோசிஸ் மட்டுமே செயல்படுகிறது. டைடல், நியோ டைடல் போன்றவை தொழில் துறையின் கீழ் செயல்படுகின்றன. இது 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அசாதாரண நிலையாகும். யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவா்களிடம் கேட்டால் செய்து கொடுப்பாா்கள் என்று கருதுகிறேன். எங்களிடம் இல்லை என்றாா்.
அப்போது பேசிய அவைத் தலைவா் மு.அப்பாவு, ‘இதுகுறித்து முதல்வரிடம் பேசி, முடிவெடுக்கலாம். முடிந்தவரை உறுப்பினா்களுக்கு சாதகமான பதில் சொன்னால் நன்றாக இருக்கும்’ என்று கூறினாா்.