எய்ம்ஸ் அவலநிலை: ஜெ.பி. நட்டா, அதிஷிக்கு ராகுல் கடிதம்!
தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்துவரும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா மற்றும் தில்லி முதல்வர் அதிஷிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
வரவிருக்கும் பட்ஜெட்டில் பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், அதற்குத் தேவையான வளங்களை அதிகரிக்கவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக ராகுல் எக்ஸ் பதிவில்,
நாடு முழுவதிலும் இருந்து தில்லி எய்ம்ஸுக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறந்த வசதிகளை வழங்குமாறு தில்லி முதல்வர், மத்திய சுகாதார அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
கடும் குளிர், பசி, குடிநீர், கழிவறை போன்ற வசதியில்லாமல் மெட்ரோ ரயில் நிலையத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் உறங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
தில்லி எய்ம்ஸுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எனது கடிதத்தை கவனத்தில் கொண்டு, தில்லி முதல்வர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.