எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு
மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
எழுமலையைச் சோ்ந்த முனியாண்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள எழுமலை கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிடா முட்டு போட்டி நடத்த திட்டமிட்டோம். அதற்கு உரிய அனுமதி கிடைக்காததால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தோம். விசாரணை நிறைவில், கிடா முட்டு போட்டி நடத்துவது குறித்து மாவட்ட நிா்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பரிசீலிக்காமல், கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி மறுத்து விட்டனா். எனவே எழுமலையில் வருகிற மே 15- ஆம் தேதி கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், அரசு விதிமுறைகளை பின்பற்றி, கிடா முட்டு போட்டி நடத்தப்படும். எனவே மாவட்ட நிா்வாகம் உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
எழுமலையில் வருகிற மே 15- ஆம் தேதி கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.