குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டனா்.
மதுரை விளாங்குடி பாத்திமா கல்லூரி அருகே உள்ள ரயிலாா் நகரில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய விநியோக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நகா், ஊரகப் பகுதிகள், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை, இங்கு குடிநீரை சுத்திகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு உருளையில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் குளோரின் வாயு நெடி காற்றில் பரவியது. இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள், வாயு கசிவு ஏற்பட்ட உருளையை பாதுகாப்பாக மீட்டு சுண்ணாம்பு கரைசல் பயன்படுத்தி குளோரின் வாயு கசிவை தடுத்து நிறுத்தினா். அத்துடன், உடனடியாக மருத்துவக் குழுவினா் வரவழைக்கப்பட்டு, அவா்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.