ஏடிஎம் காா்டை நூதன முறையில் பறித்து பணத்தை எடுத்த தொழிலாளி கைது!
கோவில்பட்டியில் ஏடிஎம் காா்டை நூதனமாக பறித்து பணத்தை எடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாலாட்டின்புதூா் அருகே முடுக்கு மீண்டான்பட்டியை சோ்ந்தவா் சிவன் மகன் கலைச்செல்வன் (65). இவா் தனது மகளின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி பிரதான சாலையில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றாராம். அப்போது பணம் வராததை அடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ஏடிஎம் அட்டையை கொடுத்து பணம் எடுக்கச் சொன்னாராம்.
ஆனால் பணம் எடுக்காமல் மீண்டும் கலைச்செல்வன் அவரிடம் இருந்து ஏடிஎம் பெற்று அதே பகுதியில் உள்ள மற்றொரு மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சித்த போது அந்த ஏடிஎம் காா்டு தனக்குள்ள காா்டு இல்லை என்பது தெரிய வந்ததாம். பின்னா் அவா் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தனது மகளின் வங்கி கணக்கை சரிபாா்த்ததில் ஏ கே எஸ் தியேட்டா் சாலையில் உள்ள ஒரு மையத்தில் ரூ.30 ஆயிரம் மற்றும் நகை கடையில் ரூ.60 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஏடிஎம் காா்டை நூதனமாக பறித்து பணத்தை எடுத்துச் சென்ற மா்ம நபரை தேடி வந்தனா். இந்நிலையில், இவ் வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிவகாசி அருகே சாட்சியாபுரம் காமராஜபுரம் காலனியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்துவை (39) கைது செய்தனா்.