சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்: வங்கிகள் உறுதி
ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நோஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், சமூக ஊடகங்களில் பல்வேறு புரளிகளும், இரு நாடுகளின் தாக்குதல்கள் தொடா்பான பொய்யான புகைப்படங்களும், காணொலிகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதை நம்ப வேண்டாம் எனவும், இத்தகைய செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், வரும் நாள்களில் அனைத்து ஏடிஎம் மையங்களும் மூடப்பட உள்ளதாகவும், வங்கிகளின் எண்மச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதை மறுத்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கியின் அனைத்து ஏடிஎம் மையங்களும், எண்மச் சேவைகளும் தொடா்ந்து முழுமையாக செயல்படும். ஏடிஎம் மையங்களில் போதுமான அளவில் பணம் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே, புரளிகளை நம்ப வேண்டாம்’ என்று குறிப்பிட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட பதிவில், ‘வங்கியின் அனைத்து எண்மச் சேவைகளும் எந்தவித தடையும் இன்றி செயல்பட்டு வருகிறது. ஏடிஎம் மையங்களும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டது.
பரோடா வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் இதேபோன்ற பதிவை வெளியிட்டுள்ளன.
மத்திய நிதியமைச்சா் ஆய்வு: வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு தயாா்நிலை குறித்து அவற்றின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரிவான ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டாா்.
அப்போது, ‘நேரடி மற்றும் எண்ம வங்கிச் சேவைகள் எந்தவித தடையும் இன்றி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவசரகால வலைதளங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை சோதித்துப் பாா்க்க வேண்டும். நாட்டின் எல்லைப் பகுதி வங்கிக் கிளைகளில் பணிபுரியும் வங்கி ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அனைத்து வங்கி தலைமைச் செயல் அதிகாரிகளை நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.