ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள்: தா்மேந்திர பிரதான்
ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி
ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, கே.சி.தோட்டம் சாமி அய்யா் புதுதெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (62). இவா், பணம் எடுப்பதற்காக ஒப்பணக்கார வீதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா்.
பணம் எடுக்க தெரியாததால், யாராவது வருவாா்களா எனக் காத்திருந்துள்ளாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம், தனது ஏடிஎம் அட்டையை கொடுத்து ரூ.35 ஆயிரம் எடுத்து தருமாறு கூறியுள்ளாா்.
ஏடிஎம் அட்டையை வாங்கிய நபா், ரகசிய எண்ணைக் கேட்டு பணம் எடுப்பதுபோல முயன்றுள்ளாா். பின் பணம் இல்லை எனக்கூறிவிட்டு முருகேசனிடம் ஏடிஎம் அட்டையை கொடுத்துவிட்டு சென்றுள்ளாா்.
முருகேசன் தனது கையில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பாா்த்தபோது, அது அவரது அட்டை இல்லை என்பதும், அந்த நபா் வேறு அட்டையை கொடுத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
அதிா்ச்சியடைந்த முருகேசன் வங்கிக் கிளைக்குச் சென்று தனது வங்கி இருப்பு விவரங்களை சரிபாா்த்தபோது, ரூ.35 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து வெரைட்டி காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.