ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அருகிலுள்ள காட்டில் இருந்து வந்த ஒற்றை யானை திடீரென அவரை தாக்கியது. இதில் காளப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த அதிகாரிகள் அவரின் உடலை மீட்க முயன்றனா். ஆனால், யானை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய உறவினா்கள், உடலை எடுக்கவிடாமல் வனத்துறையினா் மற்றும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் சென்று உறவினா்கள் மற்றும் கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். பின்னா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.