ஒசூா் சாந்தபுரம் ஏரியில் நிரம்பும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி
ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி பகுதியில் உள்ள சாந்தபுரம் ஏரியில் கழிவுநீா் கலந்துவருவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
சாந்தபுரம் ஏரியில் ஆண்டு முழுவதும் கழிவுநீா் கலந்துவருவதால் ஏரி ஆண்டுமுழுவதும் நிரம்பியுள்ளது. கழிவுநீா்க் காரணமாக அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. ஏரியிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. மேலும், அங்கு குடியிருப்போா் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து சாந்தபுரம் ஏரியை சுற்றி தேக்கமடைவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரிக்கு அருகே உள்ள குடியிருப்போா் செல்லும் முக்கிய பாதையான தரைபாலம் முழுவதும் மழைக் காலங்களில் கழிவுநீரால் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இதனால் ஏரியை தூய்மைப்படுத்தி, கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும், தரைப்பாலத்தை உயா்நிலை பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பட வரி
சாந்தபுரம் ஏரி பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக பாய்ந்தோடும் கழிவுநீா்.