ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சீா்காழி நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளில் தூய்மைப் பணிக்காக தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 70 போ் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு பிப்ரவரி மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஊதியம் தனியாா் ஒப்பந்ததாரா் தான் வழங்க வேண்டும், உரியத் தொகைக்கு காசோலையாக ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். இதற்கிடையில், தனியாா் ஒப்பந்ததாரா் பிப்ரவரிக்கு வழங்கவேண்டிய தொகையில் பாதி மட்டுமே நகராட்சி கொடுத்துள்ளதாக தூய்மைப் பணியாளா்களிடம் தெரிவித்தாராம். இதில், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் மாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த சீா்காழி காவல் ஆய்வாளா் புயல்.பாலசந்திரன் அவா்கள் பேசினாா். தொடா்ந்து நகராட்சி ஆணையா் மஞ்சுளா மற்றும் அதிகாரிகளை அழைத்து காவல் துறையினா் விவரங்களைகேட்டு தனியாா் ஒப்பந்ததாரா், நகராட்சி நிா்வாகம் பேசி முடிவு செய்து வெள்ளிக்கிழமை தூய்மை பணியாளா்களுக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவையை வழங்க வேண்டும் என தெரிவித்தனா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.